சென்னை, ஜுலை.28 திரைப்பட தணிக்கை அதிகாரி ராஜசேகர் ரூ.10 ஆயிரம் லங்சம் வாங்கும் போது பிடிபட்டார். அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தியதில் பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள 5-வது மாடியில் சினிமா படங்களை தணிக்கை செய்யும் சினிமா தணிக்கை மண்டல அலுவலகம் உள்ளது. இதில் மண்டல அதிகாரியாக டி.ராஜசேகர் (வயது 40) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஜுன் மாதம் 17ஆம் தேதி அன்றுதான் இவர் பதவி ஏற்றார்.
`காதல் சொல்ல வந்தேன்' என்ற தமிழ் படத்திற்கு சமீபத்தில் தணிக்கை நடந்தது. அந்த படத்தின் கதாநாயகனாக அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மேக்னா நடிக்கிறார். இந்த படத்தை எஸ்-3 பிலிம்ஸ் என்ற படக்கம்பெனி சார்பில் ஜெயக்குமார் தயாரிக்கிறார்.
படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க அதிகாரி ராஜசேகர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்தை கொடுக்கும்படி வற்புறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக சி.பி.ஐ. போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரி ராஜசேகரை, லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்ய தயார் நிலையில் இருந்தனர்.
சி.பி.ஐ.யின் அலுவலகமும் சாஸ்திரி பவனிலேயே செயல்படுகிறது. நமது அலுவலக வளாகத்திலேயே வெளிப்படையாக இவ்வாறு லஞ்ச பணம் கேட்பதா? என்று சி.பி.ஐ. போலீசார், அதிகாரி ராஜசேகரை பிடிக்க கண்கொத்தி பாம்பு போல காத்திருந்தனர்.
நேற்று மாலை 3 மணி அளவில் படத்தயாரிப்பு நிர்வாகி கோவிந்தராஜ், அதிகாரி ராஜசேகரிடம் லஞ்ச பணத்தை கொடுத்ததாக தெரிகிறது. அப்போது அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். ஆனால் அப்போது ரூ.25 ஆயிரத்துக்கு பதில் ரூ.10 ஆயிரம் மட்டுமே லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
ஐ.எப்.எஸ். அதிகாரியான ராஜசேகர் பதவி ஏற்ற உடனேயே அவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன.
அவரிடம் இரவு 7 மணி வரை சி.பி.ஐ. போலீசார் துருவி துருவி விசாரித்தனர். 7 மணிக்கு மேல் அதிகாரி ராஜசேகரை சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அதிகாரி ராஜசேகர் சென்னை கொட்டிவாக்கத்தில் வசிக்கிறார். அவரது வீட்டிலும் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் ராஜசேகரின் பெயரில் நான்கு வங்கி கணக்கு புத்தகமும், அவரது மனைவி யோகலட்சுமி பெயரில் 2 வங்கி கணக்கு புத்தகமும், ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணமும் மற்றும் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜசேகர் மற்றும் அவரது மனைவியின் வங்கிக்கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரி ராஜசேகர் தஞ்சாவூரை சேர்ந்தவர். கோவை விவசாய பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. பட்ட மேற்படிப்பு முடித்து விட்டு அதன் பிறகு 1998-ம் ஆண்டு ஐ.எப்.எஸ். அதிகாரியாக பஞ்சாப் மாநில பிரிவில் தேர்வு பெற்றுள்ளார்.
இவரது மனைவி பெயர் யோகலட்சுமி. அவரும் கோவை விவசாய பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படித்துள்ளார். அவர் தற்போது கோவை விவசாய பல்கலைக்கழகத்தின் திருவள்ளூரில் உள்ள கிளையில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.
சென்னை சினிமா மண்டல தணிக்கை அதிகாரி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று அங்கே வேலை பார்க்கும் ஊழியர்கள் கூறினார்கள்.