புதுதில்லி, ஜுலை 28 மத்திய உள்துறை, மாவோயிஸ்டு ஆதிக்கம் உள்ள மாநிலங்களை உஷாராக இருக்கும் படி எச்சரித்து உள்ளது. மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து மாவோயிஸ்டு பாதிப்பு உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பும், கண் காணிப்பு பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அவர்களை ஒடுக்க மத்திய-மாநில படைகள் இணைந்து பச்சை வேட்டை என்ற பெயரில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் மாவோயிஸ்டுகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள அவர்கள் தீவிர எதிர்தாக்கு தல்களிலும், நாசவேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று முதல் அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை மறைந்த வீரர்கள் நினைவு வாரத்தை மாவோயிஸ்டுகள் கடைப்பிடிக்கின்றனர். எனவே, இந்தகால கட்டத்தில் அவர்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்த சதிதிட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து மத்திய உள்துறை மாவோயிஸ்டு ஆதிக்கம் உள்ள மாநிலங் களை உஷாராக இருக்கும் படி எச்சரித்து உள்ளது. சமீபத்திய போலீஸ் வேட்டையில் மாவோயிஸ்டுகள் முக்கிய தளபதிகள் ராஜ்குமார் ஆசாத்,சகாமுரி அப்பாராவ் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் அவர்கள் கடுமையான தாக்குதல்களை நடத்ததிட்டமிட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறது. குறிப்பாக பயணிகள் ரயில்களை கவிழ்த்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தலாம். எனவே அனைத்து ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும், ரயில் பாதைகளிலும் கூடுதல் பாதுகாப்பு கொடுங்கள், எல்லா பகுதிகளையும் தீவிரமாக கண்காணியுங்கள் என்று கூறியுள்ளனர்.
இந்த எச்சரிக்கை மாநில அரசுடன் ரயில்வே துறைக்கும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து இடங்கள், பாதுகாப்பு படை முகாம்கள், தொலைபேசி கோபுரங்கள் ஆகியவற்றிலும் தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை கணித்து உள்ளது. எனவே அந்த இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுள்ளனர்.
ஆந்திரா, மேற்கு வங்காளம், சதீஸ்கார், ஒரிசா, ஜார்க்கண்ட், பீகார் ஆகிய 6 மாநிலங்களில் தான் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறியுள்ள உள்துறை இந்த 6 மாநிலங்களையும் மிக விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறது.
எனவே, மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து மாவோயிஸ்டு பாதிப்பு உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பும், கண்காணிப்பு பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மாவோயிஸ்டுகள் சதிதிட்டம் குறித்து மத்திய உள்துறை இந்தமாதம் ஆரம்பத்தில் ஏற்கனவே ஒரு எச்சரிக்கை தகவலை மாநில அரசுக்கும் அனுப்பி இருந்தது. இப்போது 2-வது தடவையாக எச்சரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.