காஞ்சீபுரம், ஜுலை 28 ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் 76-வது ஜெயந்தியை முன்னிட்டு ஏழை, மக்களுக்கு இஸ்திரி பெட்டி, தையல் மிஷின், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 76 பேருக்கு பசுமாடு (கோ) தானமாக வழங்கப்பட்டது.
இன்று (ஜுலை.28) அதிகாலை சங்கர மடத்தில் மகா பெரியவர் சந்திரசேகர சுவாமிகளின் அனுஷ்டானத்திற்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திரர் ஆகிய இருவரும் மலர்களால் அபிஷேகம் செய்து வணங்கினர். பின்னர் மகா பெரியவர் பீடத்தில் பாலாபிஷேகம் செய்தனர்.
பின்னர் மடத்தில் அமைக்கப்பட்ட மேடையில் ஜெயேந்திரசரசுவதி சுவாமிகளுக்கு விஜயேந்திரர் மலர் கிரிடம், மலர் மாலை பட்டு சால்வை அணிவித்தார். தங்க காசு மாலைருத்தி ராட்சை மாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர் தங்க காசுகளால் சொர்ணாபிஷேகம் எனப்படும் பாத பூஜையை ஜெயேந்திரசரசுவதி சுவாமிகளுக்கு விஜயேந்திரர் செய்தார்.
அடுத்து 76 நாதஸ்வர கலைஞர்களுடன் 108 பால் குடம் ஏந்தி பெண்கள் சங்கர மடத்தில் இருந்து ராஜவீதி வழியாக காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று காமாட்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
பின்னர் மகாபெரியவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகமும் கன்னிகா பூஜையும் செய்யப்பட்டது. சங்கர மடத்தில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது. ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் 76-வது ஜெயந்தியை முன்னிட்டு ஏழை, மக்களுக்கு இஸ்திரி பெட்டி, தையல் மிஷின், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 76 பேருக்கு பசுமாடு (கோ) தானமாக வழங்கப்பட்டது.