சென்னை, ஜுலை.29 அசின், இந்திப் படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றதால், அவருக்கு எதிராக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் போர்கொடி தூக்கி இருக்கிறது. ஆனால் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அவர் படப்பிடிப்பிற்காக போனதை தவறில்லை என்று கூறியபோது, சங்க செயலாளர் ராதாரவி, நடிகர் சத்யராஜ் ஆகியோர் அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசினார்கள்.
இதற்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய அசின், "நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். என் மீது நடிகர் சங்கம் தடை விதித்தால் விதிக்கட்டும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்". என்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். மேலும் படப்பிடிப்பிற்காக இலங்கை சென்ற அசின், அங்கு தமிழ் மக்களுக்கு உதவிகளையும் செய்ததாக, கூறி இலங்கை போனதை நியாயப்படுத்தியும் பேசினார்.
இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுக்கப் போகிறது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக மூன்றாவது முறையாக பதிவி ஏற்ற இராம.நாராயணன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்போகிறார்களாம்.
குறிப்பாக அசின், குறித்துப் பேசப் போகிறார்களாம். இலங்கைக்கு நடிகர், நடிகைகள் படப்பிடிப்பிற்காக போகலாமா, போகக்கூடாதா என்பது குறித்தும் பேசப்படவுள்ளதாம். தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கபோகிறார்களாம்.