சென்னை, ஜுலை.29 சென்னை மாநகரில் உள்ள ஒருசில நியாய விலைக் கடைகளில் உணவு அமைச்சர் எ வ வேலு, திடீர் சோதனை மேற்கொண்டார். அங்கு பொருட்கள் வாங்க வந்த மக்களிடமும் கருத்துக்களை கேட்டறிந்தார்.
சென்னை மாநகர பகுதிக்குள் 1,485 நியாய விலைக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சோதனைகள் நடத்தி மக்களிடம் கருத்து கேட்கவேண்டும் என்று முடிவெடுத்து, அதற்குரிய ஆலோசனைக் கூட்டம், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. உணவு அமைச்சர் எ வ வேலு இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் நகரில் உள்ள ஒருசில கடைகளுக்கு அமைச்சரே நேரில் சென்று சோதனை நடத்தியதுடன் மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். கூட்டுறவுத் துறை நிர்வாக இயக்குநர் வீரசண்முகம், பதிவாளர் யதேந்திரநாத், செயலாளர் சுவரண்சிங் ஆகியோரும் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டுனர்.
இதுதவிர உணவுப் பொருள் வழங்கு துறையின் உதவி ஆணையர்கள் தலைமையில் தலா நான்கு பேர் கொண்ட 16 குழுக்களும் நியாய விலைக் கடைகளில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.