ஆமதாபாத், ஜுலை.29 குஜராத் மாநிலத்தில் போலி என்கவுண்டரில் சொராபுதீன் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில் தற்போது குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் கொண்டு வர சிபிஐ அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர்.
இந்த வழக்கில் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்த, அவரை சிபிஐ அலுவலகத்துக்கு அழைக்க, நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த நோட்டீசை அனுப்புவதற்கு தில்லி மேலிடத்திடம் அனுமதி கேட்டு விட்டு குஜராத் சிபிஐ அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.
கடந்த 2005ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் போலீஸ் என்கவுண்டரில் சோராபுதீன் என்பவரும், அவர் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் சோரா புதீன் போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
குஜராத் மாநிலத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்த அமீத் ஷா உத்தரவின் பேரில் இந்த போலி என்கவுண்டர் நடந்ததாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அமீத்ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் 15 போலீஸ் அதிகாரிகள் கைதாகி சிறையில் உள்ளனர். அவர்களில் 2 பேர் அப்ரூவராகி உள்ளனர். இதன் மூலம் அமீத்ஷா மீதான கொலை, ஆள் கடத்தல், மிரட்டல், குற்றத்துக்கான ஆதாரத்தை அழித்தல், சதி திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் உறுதிப் படுத்தப்பட்டு வரும் நிலையில், அமீத்ஷா மீதான குற்றச்சாட்டுக்களை மேலும் ஆதாரப்பூர்வமாக்குவதற்காக சிபிஐ மேலும் சிலரை விசாரிக்க தீர்மானித்துள்ளது.
குஜராத் மாநில முன்னாள் டிஜிபி பிசிபாண்டேயை விசாரிக்க சிபிஐ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
மேலும் விசாரணை வளையத்துக்குள் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் கொண்டு வர சிபிஐ அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர்.
குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி மாநில உள்துறை பொறுப்பையும் வகித்து வருகிறார். போலி என்கவுண்டர் குறித்து விசாரித்த சிஐடி பிரிவுத் தலைவர் ஜி.சி. ரெய்ஜெரை கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதி வேறு இடத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். அந்த இட மாறுதல் உத்தரவில் நரேந்திர மோடி கையெழுத்திட்டுள்ளார்.
இந்த இட மாறுதல் உத்தரவு சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளதாக சிபிஐ கருதுகிறது. எனவே இது தொடர்பாக நரேந்திர மோடியிடம் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
நரேந்திர மோடியை சிபிஐ அலுவலகத்துக்கு அழைக்க, நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த நோட்டீசை அனுப்புவதற்கு தில்லி மேலிடத்திடம் அனுமதி கேட்டு விட்டு குஜராத் சிபிஐ அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.
சிபிஐ தலைமை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மோடியிடமும் போலி என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடைபெறும்.
சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைககள் பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.