கொழும்பு, ஜுலை 29 இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய இளம் வீரர் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி சதம் அடித்தார்.
அறிமுகமான முதல் டெஸ்டிலேயே அவர் சதம் அடித்துள்ளார். சச்சின் மற்றும் ரெய்னாவின் அபார ஆட்டத்தினால் இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது.
இந்தியா இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 642 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 3ம் நாளான நேற்று மாலை இந்தியா தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்திருந்தது.
சச்சின் டெண்டுல்கர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 108 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார். இளம் வீரர் சுரேஷ் ரெய்னா 66 ரன்களோடு களத்தில் இருந்தார்.இந்த இருவரின் அபார ஆட்டத்தின் காரணமாக இந்தியா சரிவிலிருந்து மீண்டது. இந்நிலையில் இன்று இந்தியா தனது முதல்இன்னிங்சை தொடர்ந்து ஆடியது.
டெண்டுல்கர் மற்றும் சுரேஷ் ரெய்னா தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். ரெய்னா அபாரமாக ஆடி சதம் அடித்தார். இது அவரது முதல் டெஸ்ட் போட்டியாகும். அறிமுகமான முதல் டெஸ்டிலேயே அவர் சதம் அடித்துள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவின் வீரேந்திர ஷேவாக் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்தார். அந்த டெஸ்ட் போட்டியில் சச்சினும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதே போலவே தற்போது சச்சின் சதம் அடித்த நிலையில் அறிமுக டெஸ்டிலேயே ரெய்னா சதம் அடித்துள்ளார்.
ரெய்னா மற்றும் டெண்டுல்கரின் அபார ஆட்டத்தின் காரணமாக இந்தியா பாலோ ஆனை தவிர்ப்பதற்கு தேவையான 443 ரன்களை எளிதாக கடந்தது. ரெய்னா 10 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை அடித்துள்ளார்.
கன்னி டெஸ்டில் சதமடித்த இந்தியர்கள்.
களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த மற்ற இந்திய வீரர்கள்.
லாலா அமர்நாத் 118 இங்கிலாந்து 1933
சோதன் 110 பாகிஸ்தான் 1952
க்ரிபால் சிங் 100* நியூசிலாந்து 1955
பெய்க் 112 இங்கிலாந்து 1959
ஹனுமந்த் சிங் 105 இங்கிலாந்து 1964
குண்டப்பா
விஸ்வநாத் 137 ஆஸ்திரேலியா 1969
எஸ். அமர்நாத் 124 நியூசிலாந்து 1976
முகமது அசாருதீன் 110 இங்கிலாந்து 1984
பிரவீன் ஆம்ரே 103 தென்னாப்பிரிக்கா 1992
சௌவ்ரவ் கங்குலி 131 இங்கிலாந்து 1996
வீரேந்திர சேவக் 105 தென்னாப்பிரிக்கா 2001